Breaking News
Home / செய்திகள் / நவம்பர் 26 ம் தேதி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய பொது வேலைநிறுத்தம்.

நவம்பர் 26 ம் தேதி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய பொது வேலைநிறுத்தம்.

நவம்பர் 26 ம் தேதி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய பொது வேலைநிறுத்தம்.

கல்வி, சுகாதாரம், தொழிலாளர் உரிமை, விவசாயிகள் வாழ்வாதாரம் என அனைத்தையும் பறித்து நாட்டை மீண்டும் காலனிமயமாக்கும் மத்திய அரசை எதிர்த்து நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் முழுமையாக பங்கேற்போம் ! தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அ.சங்கர் அறிக்கை.

சங்கம் சேரக்கூடாது, தொழிற்சாலைக்கு எதிராகப் போராடக்கூடாது, சம்பள உயர்வுக் கேட்கக் கூடாது, போனஸ் கிடையாது, நிரந்த வேலைக்கு உத்திரவாதம் கிடையாது, ஓய்வூதியம் தர முடியாது, ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு, தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சிதைப்பது, குறைந்தபட்ச ஊதியத்திற்கு குந்தகம் விளைவிப்பது என பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக தொழிற்சாலைகள் அரசின் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இதனை கார்ப்பரேட்டுகள் சட்டரீதியாகவே செய்வதற்கு உகந்த வகையில்தான் சட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து அரசுத் துறைகளையும் தனியாருக்கு தாரைவார்ப்பது, தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்துவது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை அமல்படுத்துவது, கல்வி, மருத்துவம், போக்குவரத்து தனியார்மயம், இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல் ஆகியவை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார்மயம் தாராளமயத்தின் விளைவாகத்தான் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு, ஏழைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்காமல் போவது ஆகியவை நடைபெறுகின்றன

எனவே நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றியாக நடத்த வேண்டும். மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறைகூவலுக்கிணங்க, தமிழகத்தில் நவம்பர் 26-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தை மிகச் சிறப்பாக நடத்துவது என கூட்டம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் பொதுவேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள்:

1.வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும், மாதம் ரூ.7500 வீதம் நிவாணர தொகை வழங்க வேண்டும்.

2.ஒரு நபருக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும்.

3.மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை ஆண்டுக்கு 200 நாள் வேலையாக உயர்த்தி, நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து, அதில் வழங்கப்படும் குறைந்தப்பட்ச கூலியை அதிகரிக்க வேண்டும்

4.வங்கி காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய படுத்தவதை நிறுத்த வேண்டும்; ரயில்வே , பாதுகாப்புத்துறை தொழிற் சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டாக மாற்றுவதைக் கைவிட வேண்டும்
.
5.அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் உரிய வயது மூப்படையும் முன்பாகவே, கட்டாய ஓய்வு தருவதற்கான கொடூரமான அரசு நிர்வாக சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

6.அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டப்படி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்;

7. பிராவிடண்ட் பண்டுடன் இணைந்த EPS-95 ஓய்வூதியத்தை அதிகரித்து மேம்படுத்த வேண்டும்.

ஆகிய ஏழு கோரிக்கைகளை இந்த பொது வேலை நிறுத்தத்திற்காக, மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. இதனடிப்படையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் இது முழுமனதோடு வரவேற்று இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கமும் ஆதரவை தெரிவித்துக் கொண்டு மாவட்ட தலைநகர்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தோழமை சங்கங்களோடு கலந்து கொள்கிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற தொழிலாளர் வர்க்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்ற பல உரிமைகளைப் பறித்து வருகிறது. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாகச் சுருக்கி பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம், மருத்துவ வசதி, விடுப்பு, போனஸ், பணிக்கொடை உள்ளிட்ட உரிமைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

8 மணி நேர வேலை என்பது உலகத் தொழிலாளர் வர்க்கம் மிகக் கடுமையாகப் போராடி, இன்னுயிர் ஈந்து, ரத்தம் சிந்திப் பெற்ற உரிமை. அந்த உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக அதிகரித்துச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

தமிழக அரசு மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறது.

ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் வகையில் போடப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் 17(ஆ) நடவடிக்கைகளைத் திட்டமிட்டு திரும்பப் பெற மறுத்து வருகிறது.

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் போன்ற 50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உரிமைகளை தமிழக அரசு பறித்துள்ளது.

எனவே, நவம்பர் 26 வேலை நிறுத்தம் மிகவும் அவசியமானது என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கருதுகிறது.

கொரோனா பொதுமுடக்கச் சூழலில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 26 அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து தோழமைச் சங்கங்களுடன் இணைந்து வேலைநிறுத்த நாளன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.

அ.சங்கர்_ பொதுச்செயலாளர்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

About Kanagaraj

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *